TOURIST FAMILY MOVIE REVIEW
அழகாக ரசிக்கும் படி... டூரிஸ்ட் பேமிலி
திரை விமர்சனம்!
நன்றி : செய்திக்கதிர்
OFFICIAL MOVIE TRAILER
Video : Think music India / YouTube
இந்தப் படத்தின் டீசர் வந்ததில் இருந்தே இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் தியேட்டர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் முதல் தேர்வாக டூரிஸ்ட் பேமிலியை டிக் செய்தேன். அந்த முடிவு வீண் போகவில்லை.
சமீப காலங்களில் தமிழில் பார்த்த மிக அழகான படம். இலங்கையில் இருந்து தப்பித்து தமிழகம் வரும் ஒரு குடும்பம். அகதிகள் முகாமிற்கு செல்லாமல் சட்டவிரோதமாக சென்னைக்கு வந்து தங்குகிறார்கள். ஒரு சிறிய தெருவில் வீடு கிடைக்கிறது. பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத குடும்பங்கள் இருக்கும் தெருவில் தங்கி, அங்கிருக்கும் குடும்பங்கள் அனைத்தையும் அன்பால் இணைப்பது தான் டூரிஸ்ட் பேமிலி. சினிமாத்தனமான கதையாக இருந்தாலும் நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளை சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து ஒரு பீல் குட் மூவி பார்த்த திருப்தியோடு நம்மை அனுப்பி வைக்கிறார் இயக்குனர்.
படத்தின் டீசரைப் பார்த்த போது மேலோட்டமாக கதை தெரிந்தாலும், இலங்கையில் பிளாஷ்பேக் போர்ஷனாவது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முதல் காட்சியில் இருந்தே சசிகுமார், சிம்ரன் குடும்பம் நமக்கு பிடித்துப் போகிறது. சின்ன சின்ன வசனங்களில் நம்மை புன்னகைக்க வைக்கிறார்கள். சில காட்சிகளில் வெடித்து சிரிக்க வைக்கிறார்கள்.
படத்தின் செண்டிமெண்ட் காட்சிகளில் எமோஷன் அட்டகாசமாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. படத்தின் இயக்குனருக்கு 24 வயது தானாம். ஒரு 2கே கிட் தான் இந்தப் படத்தின் இயக்குனர் என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு சில இடங்களில் கிரிஞ்சாக போகிறதே என்று நினைக்கும் போதே, அந்த காட்சியை அப்படியே மாற்றி, அட்டகாச காமெடியாக முடிக்கிறார்.
ஒரு திரைப்படத்தில் காட்சிகளோ, வசனங்களோ அல்லது ஏதேனும் ஒரு கேரக்டரோ படம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியான திரைக்கதை அமைப்பது எளிதல்ல. தனது முதல் படத்திலேயே இயக்குனருக்கு இந்த வித்தை கைகூடியிருக்கிறது. இளம் இயக்குனர் அபிஷன் ஜீவந்துக்கு வாழ்த்துகள்.
அந்த குட்டி நாய், சசிகுமார் மகனும், ஹவுஸ் ஓனர் பெண்ணும் பேசும் வசனங்கள், அம்மாவை இழந்த இளைஞனின் பேச்சு, குமரவேல், ஸ்ரீஜா தம்பதியினரின் அன்னியோன்யம், எம் எஸ் பாஸ்கரின் கறார்தனம், பகவதி பெருமாள் மற்றும் ரமேஷ் திலக்கின் கேரக்டர்கள் என அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
வீடு இருக்கும் காலனி மனிதர்கள் கொஞ்சம் செயற்கைத்தனமாக இருந்தாலும், எல்லோரையும் பாசிட்டிவாகவே காண்பித்திருப்பது சிறப்பு. எங்கிருந்தோ வரும் ஒருவன் அனைவரின் பிரச்சினையையும் தீர்த்து வைக்கும் விசு பட ட்ரீட்மெண்ட் தான் என்றாலும், அதை அழகாக ரசிக்கும் படி சொல்லியிருக்கிறார்கள்.
ஷான் ரோல்டனின் இசையை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். மாண்டேஜ் பாடல்களில் கவனிக்க வைக்கிறார். பிண்ணனி இசையும் பிரமாதம்.
வயதானாலும் அழகான சிம்ரன். கொஞ்சம் வெள்ளந்தியான கேரக்டரில் அசத்துகிறார். சசிகுமாருக்கென்றே அளவெடுத்து செய்த கேரக்டர். அசால்டாக செய்குறார். யோகிபாபு வந்து போகிறார். அவரது ட்ரேட்மார்க் காட்சிகள் சில சிரிக்க வைக்கிறது. தமிழில் கதைப்பதே பிரச்சினையா என்று இந்திக்கார காவலரிடம் கேட்கும் போலி புரட்சி வசனமும் வந்து போகிறது. "ஒரே வானம், ஒரே பூமி" நாம் அனைவரும் ஒன்று என்று மனிதம் பேசும் படத்தில் இதெல்லாம் தேவையா என்று இயக்குனர் யோசித்திருக்கலாம். பரவாயில்லை.
படத்தின் அனைத்து கேரக்டர்களும் மனதில் நிற்கிறது. குட்டிப்பையன் கமலேஷ் அட்டகாசம் செய்திருக்கிறான். மம்பட்டியான் பாடல் வரும் இடம் தியேட்டரே வெடித்துச் சிரிக்கும். செம்ம கிளாப்ஸ் தியேட்டரில். சிம்ரன் இருந்தும் அவரை ஆடவைக்கவில்லை என்றால் இயக்குனரை சபித்த்து விடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட இயக்குனருக்கு நன்றி.
டூரிஸ்ட் பேமிலி - நிஜமாகவே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி...
நன்றி: மகாதேவன் சிஎம்

Comments
Post a Comment